இந்திய ஜனாதிபதி, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 280 பிரிவின் கீழ் நிதிக்குழுவை நியமிக்கிறார். அதாவது, இந்திய நிதி ஆணையம் (Finance Commission of India) 1951ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 280ஆம் பிரிவின்படி குடியரசுத் தலைவரால் நிறுவப்பட்டது. நடுவண் அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான நிதிப் பகிர்தலை வரையறுக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. 1951ஆம் ஆண்டின் நிதி ஆணையச் சட்டம் இவ்வமைப்பின் உறுப்பினர்களின் தகுதிகள், நியமித்தல் வரன்முறை,பதவிக்காலம் மற்றும் அதிகாரங்களை வரையறுத்துள்ளது. அரசியலமைப்பின்படி ஒரு தலைவரையும் நான்கு உறுப்பினர்களையும் கொண்ட நிதி ஆணையம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்பட வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தின் முன்னேற்றம் மற்றும் மாறுதல்களுக்கேற்ப பல்வேறு நிதி ஆணையங்களின் பரிந்துரைகளும் பெரிதும் வேறுபட்டுள்ளன. இதுவரை பதின்மூன்று நிதி ஆணையங்கள் தங்கள் பரிந்துரைகளைக் கொடுத்துள்ளன. இந்திய அரசு ஜனவரி 2, 2013 அன்று 14 வது நிதி ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் 2015 - 2020 வரை செயல்படும். இதன் தலைவராக, வேணுகோபால் ரெட்டி [(Y.V.ரெட்டி), முன்னாள் ஆளுநர், இந்திய மைய வங்கி] நியமிக்கப்பட்டு உள்ளார்.