இந்தியாவில் ஆண் பெண் பிறப்பு விகிதம் (2001 ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி) 933 என்ற விகிதத்தில் காணப்படுகிறது. இங்கு கவனிக்க வேண்டியது, பொதுவாகவே பாலின விகிதம் அல்லது பால் விகிதம் (Sex ratio) என்பது மக்கள்தொகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயுள்ள விகிதத்தைக் குறிக்கிறது. பாலின விகிதம் பிற உயிரினங்களிலும் கணக்கிடப்படுகிறது. மானிடவியலாளர்கள் (anthropologists), மக்கள் தொகையியலாளர்கள் (demographers) போன்றவர்கள் மனிதர்களின் பாலின விகிதத்தைக் குறித்து அறிவதில் பெரும் ஆர்வமுடையவர்களாக உள்ளார்கள். என்றாலும் குழந்தைப் பிறப்பின்போது கணக்கிடப்படும் பாலின விகிதாச்சாரங்கள் தாய்மார்களின் வயது, தேர்ந்தெடுத்த கருக்கலைப்பு/சிதைப்புகள், சிசுக் கொலைகள் ஆகியக் காரணிகளால் பெருமளவு ஒருபக்கச் சாய்வினைக் கொண்டவையாக உள்ளன. உயிர்கொல்லி மருந்துகள் (pesticides), பிற சுற்றுச்சூழல் மாசுகளுக்கு ஆட்படுதல் போன்றவை பாலின விகிதத்தை பாதிக்கும் முக்கியமானக் காரணிகளுள் ஒன்றாக இருக்கலாம். 2014 ஆம் ஆண்டுக் கணக்கின்படி குழந்தைப் பிறப்பின் போது உலகளாவியப் பாலின விகிதம் 107 ஆண் குழந்தைகளுக்கு 100 பெண் குழந்தைகள் (1000 சிறுவன்களுக்கு 934 சிறுமிகள்) என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.