சட்ட மன்ற கவுன்சிலின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 40 க்கு கீழ் குறையக்கூடாது. தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தின் மேலவை ”தமிழ் நாடு லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்” (Tamil Nadu Legislative Council) என்றழைக்கப்பட்டது. தமிழ் நாட்டின் முன்னோடி மாநிலங்களான சென்னை மாநிலம் மற்றும் சென்னை மாகாணத்தின் சட்டமன்றங்களிலும் ”மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்” என்ற பெயரில் மேலவையாக இருந்ததும் இதுவே. 1861 இல், பிரிட்டிஷ் அரசு, இந்திய கவுன்சில் சட்டம், 1861 ஐ இயற்றியதன் மூலம் இந்த அவையை உருவாக்கியது. ஆரம்பத்தில் சென்னை ஆளுனருக்கு பரிந்துரை வழங்கும் அவையாகவே இது இருந்தது. இந்திய கவுன்சில் சட்டம், 1892 இன் மூலம் இதன் உறுப்பினர் எண்ணிக்கையும் பொறுப்புகளும் அதிகரித்தன. 1909 ஆம் ஆண்டு முதல் இதன் உறுப்பினர்கள் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாயினர். 1920-1937 இல் சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை அமலில் இருந்தபோது மாகாணத்தில் ஓரங்க சட்டமன்றமாக இந்த அவை செயல்பட்டது. 1937 இல் மாநில சுயாட்சி முறை அறிமுகப் படுத்தப்பட்டு, சட்டமன்றம் ஈரங்க அவையாக மாறியபோது அதன் மேலவையாகச் செயல்பட்டது. 1947ல் இந்தியா விடுதலை பெற்று 1950 இல் குடியரசாகியபோது உருவாகிய சென்னை மாநிலத்தின் சட்டமன்றத்திலும் இது மேலவையாகத் தொடர்ந்தது. 1969 இல் சென்னை மாநிலம் தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டபோது, இந்த அவையின் பெயரும் ”தமிழ்நாடு லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்” என்று மாற்றப்பட்டது. 1986 இல் இந்த அவை நீக்கப்பட்டு தமிழ்நாடு சட்டமன்றம் ஓரங்க அவையாக மாறியது. 2010 இல் இந்த அவையை மீண்டும் தோற்றுவிக்க இந்தியப் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் 2011ம் ஆண்டு இம்மீட்டுருவாக்க நடவடிக்கை கைவிடப்பட்டது.