அரசியல் அமைப்பில் 8 ஆவது பட்டியல் அட்டவணையில் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் எனில், இந்தியாவின் அலுவல்மொழிகள் (official languages of the Indian Union) அலுவல் பணிகளுக்கு முதன்மையாக இந்தியும் கூடுதலாக ஆங்கிலமும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் மாநிலங்கள் தங்களுடைய அலுவல் பணிகளுக்கான மொழியை தாங்களே சட்டமாக்கிக் கொள்ளலாம். இந்திய அரசியலமைப்போ அல்லது எந்தவொரு இந்தியச் சட்டமோ தேசிய மொழி என்று எதனையும் வரையறுக்கவில்லை. மாநிலங்கள் தங்கள் அலுவல்பணிகளுக்கான மொழியை சட்டப்பேரவை மூலம் தீர்மானிக்கின்றன. ஆகையால் அலுவல்மொழிகள் குறித்து இந்திய அரசியலமைப்பு மிக விவரமான அங்கங்களை கொண்டுள்ளது. ஒன்றியத்தின் அலுவல்பணிகளுக்கான மொழியை மட்டுமன்றி ஒவ்வொரு மாநிலம் மற்றும் ஆட்சிப் பகுதியிலும் பயன்படுத்தப்படும் அலுவல்மொழி, மற்றும் ஒன்றியமும் மாநிலங்களும் அவற்றினிடையேயும் பரிமாறிக் கொள்ளும் தகவல்களுக்கான மொழி குறித்தும் வரையறுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய இந்தியாவில் ஆங்கிலம் நடுவண் மற்றும் மாநில அளவில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 1950ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசியலமைப்பு பதினைந்து ஆண்டுகளில் படிப்படியாக இந்தி ஆங்கிலத்திற்கு மாற்றாக அமையும் என எதிர்பார்த்தது. இருப்பினும் இந்திய நாடாளுமன்றத்திற்கு இதன் பின்னரும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துமாறு சட்டமியற்ற அதிகாரம் வழங்கியிருந்தது. ஆனால் இந்தியை மட்டுமே ஒரே அலுவல் மொழியாக ஆக்குவதற்கு எழுந்த எதிர்ப்பின் விளைவாக ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடர்கிறது. ஆங்கிலம் இந்தி மொழியுடன் ஒன்றியப் பணிகளிலும் சில மாநிலப் பணிகளிலும் பிற மொழிகளுடன் மாநிலப் பணிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.