பிறப்பு இறப்பு பதிவுக்கான தகவல்களை தரும் படிவம் இரண்டு பிரிவுகளை உடையது. அதில் முதல் பகுதி சட்டப் பகுதிகளை உடையது. இரண்டாவது பகுதி புள்ளி விவரப் பகுதியாகும். பிறப்பு இறப்பு தகவல்களை 21 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும் (அதாவது நிகழ்வு நடந்த நாளில் இருந்து). ஒருவேளை பிறப்பு இறப்புத் தகவல் 21 நாட்களுக்குப் பிறகு 30 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்டால் கால தாமதக் கட்டணம் ரூ. 2 வசூலிக்கப்படும். இது பற்றி விதி 9 இல் உள்ளது. அதுவே 30 நாட்கள் முடிந்து ஓராண்டிற்குள் தகவல் தந்தால் விதி 9 (2) - இன் படி பதிய வேண்டும். இதற்கான கால தாமதக் கட்டணம் ரூ. 5 ஆகும். ஓராண்டிற்கு மேல் பிறப்பு இறப்புப் பதிவு செய்யாவிட்டால் குற்றவியல் நீதி மன்றத்தில் அசல் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதிலும் சென்னையை பொறுத்தவரையில் மாநகரக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆதாரச் சான்றுடன் மனு தாக்கல் செய்ய வேண்டும். அது ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதன் பின்னர் நீதிபதியின் ஆணை பெற்ற பிறகு ரூபாய் 10 செலுத்தி பதிய வேண்டும்.