வருவாய் துறை அதிகாரிகள் பொதுவாக பாக்கியை உரிய காலத்துக்குள் செலுத்தாத பாக்கிதாரர்கள் மீது வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் தான் நடவடிக்கை எடுப்பார்கள். அந்த வகையில் பாக்கியை திரும்பிச் செலுத்தாதவர்களின் அசையும், அசையா சொத்துக்கள் கூட ஜப்தி செய்யப்படலாம். இதற்கென கட்டளைப் பதிவேடுகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும். மேலும், ஜப்திக்காகவே நெ 1 டிமாண்ட் நோட்டிஸ் கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்த நோட்டிஸை கொடுக்க வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர் ஒப்புதல் அளித்தல் அவசியம். மேற்கண்ட இந்த நோட்டிஸ் கொடுக்கப்பட்ட பிறகு முதலில் அசையும் சொத்துக்கள் அனைத்தும் ஜப்தி செய்யப்படும். ஏனெனில் அசையும் சொத்துக்கள் இருக்கும் போது அசையா சொத்துக்களை ஜப்தி செய்யக் கூடாது. அதிலும் சூரிய உதயத்திற்கு முன்பும், சூரிய உதயத்திற்கு பின்பும் சொத்துக்களை ஜப்தி செய்யக் கூடாது என்ற விதியும் உண்டு. மேலும் அசையும் சொத்துக்களில் மாங்கல்யம் அல்லது திருமண மோதிரம், உழவு மாடுகள் (1 ஜதை) கதவு, ஜன்னல்கள், உழவுக் கருவிகள் போன்றவற்றை ஜப்தி செய்யக் கூடாது. மேலும் அசையும் சொத்தை ஜப்தி செய்ய படிவம்- 2 தயாரிக்கப் பட வேண்டும். அத்துடன் ஜப்தி பற்றிய விபரப் பட்டியல் பாக்கிதாரருக்கு வழங்கப் படுதல் வேண்டும். இப்படியாக ஜப்திக்கு பின், ஜப்தி செய்யப்பட்ட பொருள்கள் அனைத்துமே கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பில் இருத்தல் வேண்டும். அத்துடன் ஜப்தி செய்யப்பட்ட இதர கால் நடைகளை பட்டியில் அடைத்துப் பராமரிக்க வேண்டும். அவை பிற்பாடு நெம்பர் - 2 நோட்டிசுக்கு பிறகு ஏலம் விடப்படும். ஒரு வேளை ஏலத்திற்கு முன்னர் பாக்கித் தொகையை செலுத்த வேண்டிய நபர் செலுத்தி விட்டால் ஜப்தி செய்த பொருள்கள் அனைத்தும் மீண்டும் அவரிடமே பத்திரமாக ஒப்படைக்கப்படும். இதற்கெனவே பாக்கிதாரருக்கு கெடு அளிக்கப்படும். குறித்த கெடு முடிந்த மாத்திரத்தில் பாக்கித் தொகையை செலுத்தத் தவறும் போது பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து சொத்துக்களையும் அரசாங்கம் ஏலம் விட்டு விடும். அப்படியாக ஏலம் விடப்பட்ட பின் ஏலம் எடுத்தவர் அந்தத் தொகையை உடனே செலுத்த வேண்டும். ஒரு வேளை, செலுத்த வேண்டிய தொகைக்கு அதிகமாக ஏலத் தொகை இருப்பின் அது பாக்கி தாரருக்கு அளிக்கப்படல் வேண்டும். இந்த ஏலம் விஷயத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்று பார்த்தால், அசையா சொத்து ஜப்திக்கு படிவம் -4 இன் டிமாண்ட் நோட்டீஸ் தர வேண்டும்.