ஒரு மாநிலத்தின் உண்மையான ஆட்சித் துறை அதிகாரி முதலமைச்சரும் அவருடைய அமைச்சரவையும் தான். இந்தியக் குடியரசின், 29 மாநிலங்களின் பெரும்பான்மையான உறுப்பினர்களால் சட்டமன்ற உறுப்பினர்களால் ஆளும் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரையே, ஆளுநர் முதலமைச்சர் பதவிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். மேலும் முதலமைச்சரால் பரிந்துரைக்கப்படுபவர்களை அமைச்சர்களாக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். முதலமைச்சரும் அவரின் தலைமையிலான அமைச்சரவைக் குழுவும், சட்டமன்றத்தில் எழுப்பிடும் கேள்விகளுக்கு பதில் கூற கடமைப் பட்டவர்கள் ஆவார். முதலமைச்சர் என்பவர் ஒரு மாநிலத்தின் ஆளுநர் சார்பாக நிர்வாகச் செயல் அலுவலராக பணியாற்றுகிறார். முதலமைச்சருக்கு தேவையான ஆலோசனைகள் கூற அமைச்சரவை உள்ளது. மேலும் சட்டமன்றத் தீர்மானங்களையும், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் நிறைவேற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் இயங்கும் தலைமைச் செயலகத்தில் உள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் உதவுகின்றனர். பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கை பெற்றிருக்கும் வரையில் மட்டுமே ஒருவர் முதலமைச்சர் பதவியில் தொடரமுடியும். மேலும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, சட்டமன்றத்தின் ஆயுட்காலமான ஐந்து ஆண்டுகள் முடிந்தவுடன் முதலைமச்சரின் பதவிக் காலம் தானாகவே முடிவடைகிறது. முதலமைச்சருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் : 1. இந்தியக் குடிமகனான இருக்க வேண்டும். 2. 25 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும் 3. சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், முதலமைச்சராக பதவி ஏற்ற ஆறு மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்திருக்கப் பட்டிருக்க வேண்டும். மாநில சட்டமன்றக் கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்களின் வாக்குகளை பெற்றவரையே முதலமைச்சர் பதவிக்கு ஆளுநர் அறிவிக்கிறார். முதலமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு, ஆளுநர் பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 164-இன் படி, முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களை, அந்தந்த மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களால் தீர்மானிக்கப்படுகிறது.