தலைமைக் கணக்குத் தணிக்கையாளரை நியமிப்பது குடியரசுத் தலைவர் தான். இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர் இந்தியக் குடியரசு எனப்படும் இந்திய அரசின் தலைவர் ஆவார். மத்திய நிர்வாகக் குழுவின் தலைவரும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவரும், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். இந்தியாவின் முதல் குடிமகன் என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார். எனினும் இந்திய குடியரசுத் தலைவரின் பணிகள் சடங்கு நோக்கிலேயே அமைந்துள்ளன. பிரதமரும் அமைச்சரவையுமே செயல்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர். இராஜேந்திரப் பிரசாத் ஆவார், தற்போதைய (2020) குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆவார். தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியா (Comptroller and Auditor General (CAG) of India) இந்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் அரசு நிதி உதவியைக் கணிசமான அளவில் பெறும் அமைப்புகளின் வரவு செலவுக் கணக்கைச் சரிபார்க்கும் அதிகாரத்துடன் இந்திய அரசியலமைப்பின் (Chapter V) கீழ் நிறுவப்பட்ட ஓர் அதிகார மையம் ஆகும். இதன் தலைவர் குடியரசு தலைவருக்கு நேரடியாகக் கட்டுப்பட்டவர். அவர் அரசுக்கு எந்தவிதத்திலும் கட்டுப்பட்டவர் கிடையாது. அரசுடமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் வெளித் தணிக்கையாளராகவும் இவர் செயல்படுகிறார். தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைகள் நாடாளுமன்ற/மாநிலச் சட்டப்பேரவைகளின் சிறப்புக் குழுக்களான பொது கணக்குக் குழுக்களால் ஆய்வு செய்யப்படுகின்றன. நாடெங்கும் 58,000 ஊழியர்களைக் கொண்ட இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையின் தலைவராகவும் செயல்படுகிறார். வினோத் ராய் தலைமையின் கீழ் இயங்கிய பொழுது இந்த அமைப்பு அரசின் முறைகேடுகளை வெளிப்படுத்தியமையால் குறிப்பாக இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு,பொதுநலவாய விளையாட்டுகள் நடத்துதலில் ஊழல் மற்றும் இந்திய நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு பரவலாக ஊடகங்களில் அறியப்படுகிறது. அரசுடன் வருமானத்தைப் பகிர்ந்து கொள்ளும் திட்டங்களில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார்-பொது பங்களிப்புத் திட்டத்தை (PPP) ஆய்வு செய்யும் அதிகாரம் தலைமைக் கணக்குத் தணிக்கையாளருக்கு உண்டு.