தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் துணைத் திட்டமாக ஒரு மில்லியன் கிணறுகள் திட்டம் தொடங்கப்பட்டது. இந்திய அரசு வேலை வாய்ப்பை அதிகரிக்க எண்ணற்ற திட்டங்களை தீட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் 100 நாள் வேலைத்திட்டம் மிகவும் பிரபலமானது. இந்த 100 நாள் வேலை திட்டத்தையும் இப்பகுதியில் பார்ப்போம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)) அல்லது என்பது இந்திய அரசு கொண்டுவந்த வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகும். இச் சட்டம் 25.05.2005 முதல் அமலாக்கப்பட்டது. முதலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இது 2009 காந்தியடிகள் பிறந்த நாளன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது. தமிழக கிராமப்புற மக்கள் இதனை 100 நாள் வேலை என்று அழைக்கின்றனர். இத்திட்டத்தின் கீழ், பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்புத்திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். 18 வயது நிரம்பிய திறன் சாரா உடல் உழைப்பு செய்ய விரும்பும் கிராமப்புற நபர்கள், தங்கள் பெயர், வயது மற்றும் முகவரியை கிராம பஞ்சாயத்திடம், புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். கிராம பஞ்சாயத்தார், தகுந்த விசாரணைக்கு பின்னர், நபரை பதிவு செய்து, அவருக்கான, பணி அட்டையை வழங்குவார். பணி அட்டையில், நபரின் விவரங்கள், புகைப்படத்துடன் இடம் பெற்று இருக்கும். 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு, உட்பட்டு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இத்திட்டம் ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு வேலை உறுதி அளிக்கிறது.