அட்டவணைகளில், மாநிலங்களுக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையே அதிகாரங்களை பிரித்து தரும் அட்டவணை ஏழாவது அட்டவணை ஆகும். இந்தியாவில் மாநில அரசுகள் என்பன பட்டியலிடப்பட்ட 29 இந்திய மாநிலங்களை ஆட்சி செய்யும் அரசுகளாகும். ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கட்சியைச் சேர்ந்த அமைச்சரவை முதன்மை அமைச்சர் (பொதுவாக முதலமைச்சர்) ஒருவரால் தலைமையேற்று நடத்தப்படுகிறது. இவரே மாநில அரசில் அதிக அதிகாரம் பெற்றவராவார். இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 370 ன் படி சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் அதிகாரங்களை மத்திய மாநிலங்களுக்கு இடையே பிரித்து வழங்குகிறது. இதில் ராணுவம், வெளியுறவு போன்ற துறைகளை மத்திய அரசும் சட்டம் ஒழுங்கு காவல் போன்ற பணிகளை மாநில அரசுகளும் மேற்கொள்கின்றன. மாநில அரசுகளுக்கு வருமான மூலங்களாக விற்பனை வரி, பத்திரப் பதிவு வருமானம் முதலியன ஒதுக்கப்பட்டுள்ளன.